ரித்வார்,

மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

யோகா குருவான பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஆசார்ய பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த சுகாதாரப் பொருட்கள் தயாரிக்கும் 10 தொழிலதிபர்களில் ஒருவர் என்னும் விருது அளிக்கபட்டுள்ளது. இதை ஒட்டி நடந்த கூட்டத்தில் பாபா ராம்தேவ் ஆசார்ய பாலகிருஷ்ணாவை தனது நிறுவனத்துக்கு பெருமை தேடித் தந்தவர் என புகழ்ந்தார்.

மேலும் பாபா ராம்தேவ், “நமது நாட்டின் மக்கள் தொகை இன்னும் 50 வருடங்களுக்கு 150 கோடியை தாண்டக் கூடாது. ஏனெனில் நமக்கு இருக்கும் வசதிக்கு அதற்கு மேல் மக்கள் தொகையை வைத்து சமாளிக்க முடியாது. இதற்கு ஒரே வழி மக்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெறக் கூடாது என்பதாகும். அதை ஒட்டி அரசு சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது மற்றும் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். அரசு அளிக்கும் எந்த ஒரு நலத்திட்டமும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடாது. இவ்வாறு அனைத்து மதத்தினருக்கும் சட்டம் இயற்றப்பட்டால் மக்கள் இரு குழந்தைகளோடு நிறுத்தி விடுவார்கள்.

அத்துடன் பசுக்களை வெட்டுவதை சட்ட பூர்வமாக தடை செய்ய வேண்டும். இதனால் பசுவதை செய்பவர்களுக்கும் பசு காவலர்களுக்கும் இடையில் உள்ள தகராறு முழுவதுமாக மறைந்து விடும். மாமிசம் சாப்பிடுபவர்கள் மாட்டு மாமிசம் தவிர மற்ற மாமிசங்களை உண்ணலாம்.

உலகின் பல இஸ்லாமிய நாடுகளில் கூட முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. அவ்வாறு இருக்க இந்தியாவில் ஏன் முழு மதுவிலக்கை அமுல் செய்யக்கூடாது? இந்தியா பல சன்னியாசிகள் வாழ்ந்த புனிதமான நாடு. எனவே நாடு முழுவதும் முழுமையான மது விலக்கை அரசு கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.