லக்னோ:

‘‘ஆர்எஸ்எஸ் இல்லை என்றார் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானோடு இருந்திருக்கும்’’ என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் நீரஜ்குமார் பதில் கூறுகையில் ,‘‘சுதந்திர போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை. மாறாக ஆங்கிலேயருக்கு சேவகம் செய்து கொண்டிருந்தனர். அதனால் வரலாறு தெரியாமல் முதல்வர் பேசக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ அனைவருக்கும் ஆர்எஸ்எஸ்.ன் உண்மையான வரலாறு தெரியும். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்த காரணத்தால் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கூட சிறையில் அடைக்கப்படவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் மற்றொரு தலைவரான பவன் வர்மா கூறுகையில், ‘‘ஆதித்யாநாத் ஆட்சியில் அப்பாவி மக்கள் தாக்கப்படுகின்றனர். ஆன்டி ரோமியோ படை மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் எல்லை மீறி செயல்படுகின்றன. ஆனால், சட்டம் ஒழுங்கை காத்து வருவதாக ஆதித்யாநாத் கூறி வருகிறார்.
ஆர்எஸ்எஸ்.ஐ தவிர்த்து முதலில் இதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஈடுபடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்’’ என்றார்.

ஆதித்யாநாத்தை பாதுகாக்கும் வகையில் பாஜ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஆர்எஸ்எஸ் நாடு, உலகளவில் தேச பற்றுள்ள ஒரு அமைப்பு. ஒன்றுபட்ட இந்தியா மீது நம்பிக்கை கொண்டது என்ற அடிப்படையில் ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தான் காய் கங்கா மற்றும் காவ் ரக்ஷா போன்ற விஷயங்களில் ஆதித்யாநாத் கவனம் செலுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

முன்னதாக ஆதித்யாநாத் பேசுகையில்,‘‘ ஆர்எஸ்எஸ் மற்றும் டாக்டர் சியாம் பிரசாத் முக்ர்ஜி இல்லை என்றால் மேற்கு வங்கம், பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், ‘‘உலகிலேயே அரசின் உதவி இன்றியும், சுயநல நோக்கமின்றி நாட்டிற்காகவும், கலாச்சாரத்திற்காகவும் செயல்படும் அமைப்பு ஆர்எஸ்எஸ் மட்டுமே’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.