ராஞ்சி:

வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவலால் 7 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று பரவிய தவறான தகவலை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் இவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாஸ் குமார் வெர்மா, கவுதம் குமார் வெர்மா, கங்கேஷ் குப்தா ஆகியோர் நாகாதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு கும்பலால் இழுத்து வரப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர். இதில் வயதான பெண் ஒருவரும் பலத்த காயமடைந்துள்ளார்.

அதேபோல் ராஜா நகர் பகுதியில் சோபாப்பூர் மற்றும் சோசோமவுலி கிராமங்களில் இதேபோன்று நான்கு பேரை குழந்தை கடத்துபவர்கள் என்று கருதி கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

ஜார்கண்ட் போலீஸ் ஐஜி ஆசிஷ் பத்ரா கூறுகையில்,‘‘ வாட்ஸ் அப் செயலியில் ஒரு தகவல் பரவியது. அதில் குழந்தைகள் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, குழந்தைகளின் உடல் உறுப்பை விற்பனை செய்வதாக இந்த கிராம மக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதன் காரணமாக இந்த கொடூர கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. மலை வாழ் மக்களிடம் புரளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது’’ என்றார்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு போலீசார் அங்கு சென்றதும் கிராம மக்கள் போலீசாரையும் தாக்க தொடங்கினர். இதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர். வாட்ஸ் அப் மூலம் முதலில் இந்த புரளியை கிளப்பியவர் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இது வரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.