கான்பூர்: பிட்புல் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கான்பூரில் ராட்வீலர், பிட்புல் நாய்களை வளர்க்க அம்மாநகர மேயர் தடை விதித்துள்ளார்.

உலக மக்களால் விரும்பி வளர்க்கப்படும் விலங்குகளில் நாய் முதலிடத்தில் உள்ளது.  பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே கருதி வளர்த்து வருகின்றனர். ஆனால், சிலவகை நாய்களால் வளர்ப்போர் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் முதலிடம் வகிப்பது,  ஆக்ரோஷ குணம் கொண்ட ராட்வீலர், பிட்புல்  நாய் வகைகளே. இந்த நாய்களின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமாட்டின் தாயை கடித்தது தொடர்பான வீடியோ வைலான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி என்பவரை அவரது வீட்டிலேயே வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்துக் கொன்றது. பஞ்சாபில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் 13 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பியது. இது, நாய் வளர்ப்போர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிட்புல்  நாயை வீடுகளில் வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக்கோரி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு  பீட்டா அமைப்பு கடிதம் எழுதியது .

இந்த நிலையில் கான்பூர் நகர எல்லைக்குள் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே கூறுகையில், “பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்கள் நகர எல்லைக்குள் தடை செய்யப்பட்டுள்ளன. சர்சையா காட் பகுதியில் பிட்புல் நாய் ஒன்று பசுவை தாக்கிய சம்பவத்துக்குப் பிறகு, பிட்புல் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.