டெல்லி; ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கவும், மத்தியஅரசு உழியர்களுக்கு 4சதவிகித அகவிலைப்படி உள்பட பல்வேறு திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய கேபினட் கூட்டம் வியாக் பவனில் நடைபெற்றது.  இதில், 4% அகவிலைப்படி உயர்வு, 3 ரயில் நிலையங் களை மறு அபிவிருத்தி செய்தல் மற்றும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை அரசு மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது என ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்தியஅரசின்  பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதாக தகவல்கள் வெளியானது.

உத்தரப் பிரதேசத்தில்  செப்டம்பர் மாதத்திற்கு பின் இத்திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என மாநிலஅரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இலவச அரிசி திட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத் திற்கு நீட்டிக்க  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இறுதி வரை இலவச அரிசி திட்டம் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.

மேலும், மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தவும் கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது என  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.