சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எழுத்துத்தேர்வாகவே நடைபெறும், ஆன்லைன் தேர்வு கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதன்படி,  கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டிருக்கவேண்டிய செமஸ்டர் தேர்வுகள், இந்த  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இது சர்ச்சையான நிலையில், மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி  மே 17-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாலும், தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் செப்டம்பர் 1ந்தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து, இனிமேல் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத்தேரவாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாட்டகம் அறிவித்தது. இதற்கு பல தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை  ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தன.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுபொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என தெரிவித்துள்ளதுடன்,   கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும் என  கூறினார். மேலும்,  பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வானவர்கள் இன்றுமுதல் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.