சென்னை: மழை வெள்ளைத்தில் மிதந்த சென்னையில் திமுக பொறுப்பேற்ற 6 மாதங்களில் சென்னையில் மட்டும் 720 கி.மீ. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன என்றும், பெட்ரோ ரெயில் பணி காரணமாக பல இடங்களில் மழைநீர் வடிகால் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுதான் சென்னையின் வெள்ளத்துக்கு காரணம் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம்  வங்கக்கடலில் உருவான  காற்றதழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகசென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டியது. சென்னையில் தொடர்ந்து 3 நாட்கள் பெய்த கனமழையால் சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாது. பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. கடந்த அதிமுக ஆட்சியைப்போன்றே திமுக ஆட்சி இருப்பதாகவும், மழை காலத்தை முன்னிட்டு சென்னையில் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்கள் குறைகூறினர்.

இந்த நிலையில், நேற்று சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில், சென்னையில் மட்டும் 720 கி.மீ. தூரத்துக்கு மழை நீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்று தெரிவித்ததுடன்,  மழைக்காலத்திற்கு பின் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியில், அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

மழை நீர் தேங்கிய பகுதிகளில், கொசு மருந்து அடிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளில் 3,400 களப்பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்காக 1,300 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சென்னையில், கடந்த இரண்டு நாட்களாக 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் டன் வரை குப்பை அகற்றப்பட்டன என்று கூறினார்.

மேலும், சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கு காரணம், மெட்ரோ ரயில் பணிகள் என குற்றம் சாட்டியவர்,  விருகம்பாக்கம் பாரதிதாசன் காலனி பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது. ஜவஹர்லால் நேரு சாலை, காசி திரையரங்கம் அருகே, நெடுஞ்சாலை துறையின் மழை நீர் வடிகால் 600 மீட்டர் அளவிற்கு ‘மெட்ரோ’ ரயில் பணிகளால் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, 600 மீட்டருக்கு வடிகால் கட்டி விட்டால், பாரதிதாசன் காலனியில் தேங்கும் மழை நீர், அடையாற்றிற்கு சென்று விடும்.

அதேபோல், ஈக்காட்டுத்தாங்கலில், ஜவஹர்லால் நேரு சாலையில், 150 மீட்டர் வடிகால் துண்டிக்கப்பட்டதால், பாலாஜி நகர் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில் மழை நீர் தேங்கியது. சைதாப்பேட்டை அண்ணா சாலையில், 100 மீட்டருக்கு வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மழைநீர் வடிகால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்தஆறு மாதங்களில் சீர் செய்யப்படும். இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னையில் எங்கே  ஆக்கிரமிப்பால் எங்கே வெள்ளம் ஏற்பட்டது என தகவல் தெரிவித்தால், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

10 ஆண்டாக ஆட்சியில் இருந்த அதிமுக, பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்றவர்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில், சென்னையில் மட்டும் 720 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன என்றார்.