சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எங்களிடம் ‘யாரும் பேசவுமில்லை;  கூட்டணியில் சேர யாரும் அழைக்கவுமில்லை’  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புலம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரேமலதாவின் அரசியல்  பேராசை மற்றும் அங்காரத்தால் தேமுதிக மீண்டும் அரசியல் அநாதையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில்,  திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக  பிரிந்த நிலையில், அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக அக்கட்சிகளுடன் தமகா, பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதபாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், பிப்ரவரி 7ந்தேதி நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த்,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தேமுதிக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. கேப்டன் இறப்பு மூலம் இது அனுதாபம் ஓட்டு என்று நினைக்காதீர்கள்,  அனைவரும் நல்ல தலைவரை இழந்து இருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில், 14 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா எந்த கட்சி வழங்குகிறதோ அந்த கட்சி உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ள னர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தலின்போதும் இதுபோன்று அகங்காரத்தில் பேசி  தேமுதிக பாதாளத்தில் தள்ளிய பிரேமலதா, தற்போது மீண்டும், அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடித்து வருவது மற்ற கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக – 0.43% வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதனால் அந்தக் கட்சியின் அடித்தளமே ஆட்டம் கண்டது.  தமிழகத்தில் போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் நோட்டாவைவிட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழகத்தில் நோட்டாவின் வாக்கு சதவீதம் 0.77 ஆகும். அது போல் தேமுதிக அதைவிட குறைவாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் பெற்று 0.43 சதவீத வாக்கு வங்கியை மட்டுமே வைத்திருக்கிறது. அந்தக் கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் டெபாசிட்டை கூட இழந்துள்ளார்.

ஏற்கனவே, . 2016ல் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆக இருந்தது. 2019 எம்பி தேர்தலில் 2.19 சதவீதமாக குறைந்து,  தற்போது, தேமுதிகவுக்கு முரசு சின்னம்கிடைக்குமா என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி இந்திய தேர்தல் தலைமை ஆணையரிடம் தேர்தல் தொடர்பாக மனு அளித்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தேமுதிக சார்பில், தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களை இதுவரை யாரும் அழைக்கவில்லை’’ என்று விரக்தியாக கூறினார்.

சமீபத்தில் மரணமடைந்த, தேமுக தலைவர்  விஜயகாந்த் மறைவுக்கு வந்த பொதுமக்களின் கூட்டத்தை கண்டு, மெய்சிலிர்த்துபோய் உள்ள பிரேமலதா, அதை வாக்கு வங்கியாக  நினைத்து மற்ற கட்சிகளிடம் பேரம் பேசி வருவது அரசியல் களத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.