கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

அண்மையில் அமைச்சரவையை அவர் மாற்றி அமைத்தார்.

மந்திரி பதவி கிடைக்காத பா.ஜ.க. தலைவர்கள், எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மூத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசவன கவுடா பட்டீல் “பி.எஸ்.எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு புதிய முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்பார்” என கூறி இருந்தார்.

இதற்கு எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பேசிய அவர் “மக்கள் ஆதரவும், பிரதமர் மோடி ஆதரவும் இருக்கும் வரை என்னை முதல்வர் பதவில் இருந்து யாரும் அசைக்க முடியாது” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

“நான் பதவி விலகுவேன், வேறு ஒருவர் முதல்வராக வருவார் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்” என தெரிவித்த எடியூரப்பா “மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கும் என் மீது நம்பிக்கை உள்ளது” என்றார்.

– பா. பாரதி