சென்னை; புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை; கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பி மணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் XBB , BA2 வகை வைரஸ் பரவி வருகிறது”  என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், அண்மையில் நாடு முழுவதும் கொரோனாவால்  3 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.46 கோடி (4,46,95,420) ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 98.8 சதவீதமாக உள்ளனர்.நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 4,41,58,703 ஆக உள்ளது. தற்போதைய இறப்பு எண்ணிக்கை 1.19 சதவீதமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 220.65 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இப்போது சென்னை, கோவை தவிர வேறு எங்கும் வைரஸ் பாதிப்பு இரட்டை இலக்கில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுக்க இப்போது 402 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாகக் கோவையில் மட்டும் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 37 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த  நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரிகள் மருத்துவ நிபுணர்களுடன்  ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த  ஆலோசனைக் கூட்டம் தொடங்கி  நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ‘மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்த வர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில், உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது.

தமிழகத்தில் ஒமிக்ரான் XBB , BA2 வகை வைரஸ் பரவி வருகிறது”   இந்த புதியவகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. இதனால் மக்கள் பதற்றப்பட தேவையில்லை. கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு கூறினார்.