மதுரை: வட மாநில தொழிலாளர்கள்  குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தொடர்பான  வழக்கில், உத்தரபிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் உம்ராவுக்கு  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி காரணமாக ஏராளமான வடமாநிலத்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், தமிழகத்தின் தொழில்நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோ வதந்தி என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக டெல்லியைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியதுடன், தமிழ்நாட்டில் சென்று  முன்ஜாமீன்  பெறக்கோரி அறிவுறுத்தியது.

இதையடுத்து, உம்ரா தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் ஒரு வழக்கறிஞர். அவர் ஏன் இதுபோன்ற வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் மறுபதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவால் ஏற்படும் பின்விளைவுகளின் தீவிரத் தன்மை அவருக்கு தெரியாதா? மனுதாரர் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அவருக்கு சமூக பொறுப்பு இல்லையா? ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். பின்னர் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி,  அவர் 15 நாட்கள் தூத்துக்குடியில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். இனிமேல் இவ்வாறு வதந்தி பரப்ப மாட்டேன் என உறுதி கடிதம் வழங்க வேண்டும். அதை மீறினால் அவரது முன்ஜாமீன் தானாக ரத்தாகிவிடும் என தீர்ப்பை வழங்கினார்.