சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை வெளியேற முடியாதவாறு, அவர்களின் வீட்டு வாசல் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு வந்தது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலை யிலும், கொரோனா முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், இனிமேல், கொரானா பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தகரமடித்து தனிமைப்படுத்தும் முறை கைவிடப்படுவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில், கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தொற்று பரவிய பகுதியை தகரம் கொண்டு அடைத்து, அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியேறாதவாறும், வெளியில் யாரும் உள்ளே புக முடியாதவாறும் தடுக்கப்பட்ட வந்தது. பின்னர், பாதிக்கப்பட்டவரின் வீட்டில் மட்டும் தகரம் அடித்து தடுக்கப்பட்டு வந்தது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் உருவாக்கியது. இதனால், தகரம் வைத்து தடுக்கும் முயற்சியை கைவிட கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை,  தகரமடித்து தனிமைப்படுத்தும் முறையினை சென்னை கார்ப்பரேஷன் நிறுத்தி விட்டதாக சென்னை கார்ப்பரேஷன் கமிக்ஷனர் பிரகாஷ் கூறினார். மேலும், வெளிநாட்டிலிருந்தது சென்னை வருவோர், தங்களது வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளலாமென்றும், பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிருந்து வருவோருக்கு நோய்  அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென்றும் கூறினார்.