சென்னை:
கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் போதுமான தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

தடுப்பூசி திருவிழா என மத்திய அரசு விளம்பரங்களை பெரியளவில் செய்தாலும் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பவில்லை. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்தாலும் தடுப்பூசி பற்றாக்குறையால் தேவையான தடுப்பூசி கிடைக்கவில்லை.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஒரு விலையையும், மாநில அரசுக்கு விலையையும் தனியாருக்கு ஒரு விலையையும் நிர்ணயம் செய்து காசு பார்க்கின்றன.

இந்நிலையில் தடுப்பூசி தேவையை சமாளிக்க உலகளாவிய டெண்டருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெண்டர் எடுக்க நிறுவனம் வராததற்கு மத்திய அரசு தான் காரணம் என அபத்தமாக கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.