டெல்லி: ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்கு மேல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்த இந்தியன் ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி,   5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பெற்றோர்கள், தங்களது சிறு குழந்தைகளுக்கு டிக்கெட் எடுப்பது தொடர்பான குழப்பமான நிலை தொடர்ந்து வந்தது. இதுதொடர்பாக சில விதிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தகவல்கள்  வெளியாகின. இதையடுத்து, ரயில்வே விளக்கம் அளித்த உள்ளது.

அதன்படி, ரெயில்களில் பயணம் செய்கிற 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அது வழங்கப்படமாட்டாது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படிஇ, பயணிகள், 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அதற்காக அவர்கள் பெரியவர்களைப்போன்று முழு கட்டணமும் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும்.  இது தற்போது பின்பற்றப்படுகிற நடைமுறை. இந்த நடைமுறை, தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன என்ற தகவல் பொய்யானது என்றும், . ரெயிலில் பயணம் செய்கிற குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை ரெயில்வே மாற்றவில்லை என்று தெரிவித்து உள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயிலில் பயணிப்பதற்கு தனி படுக்கை வசதி வேண்டுமென்றால், டிக்கெட் பெற வேண்டும். அவர்களுக்கென்று தனிபடுக்கை வசதி தேவையில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே இருப்பதை போலவே இலவசமாகவே பயணிக்கலாம்.

இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது

எனவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயில்களில் தனி படுக்கை வசதியின்றி பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கத்தேவையில்லை என்பது தெளிவாகி உள்ளது.