தி இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து குழுமத்தின் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு நிர்மலா லக்ஷ்மன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Nirmala Lakshman

கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் ‘தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட்’ (THGPPL) நிறுவனத்தின் தலைவராக 2020 ம் ஆண்டு மாலினி பார்த்தசாரதி பொறுப்பேற்றார்.

மூன்றாண்டுகளாக தலைவராக இருந்து வரும் நிலையில் அவரது பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிய பாராளுமன்ற திறப்பு விழாவையொட்டி ‘செங்கோல்’ குறித்த உண்மைச் செய்தி என்ன என்பது குறித்து தி இந்து நாளிதழில் செய்தி வெளியானது.

Malini Parthasarathy (file picture)

அதில் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் ஒரு பரிசுப்பொருள் தானே தவிர மவுண்ட்பேட்டனிடம் இருந்து அதிகாரம் கைமாறியதற்கான அடையாளம் அல்ல என்றும் அதற்கான ஆதாரம் இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து பாஜக ஆதரவாளர் ‘துக்ளக்’ குருமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கான ஆதாரங்களை குருமூர்த்தி தந்தால் தாங்கள் வெளியிட்ட செய்திக்காக மன்னிப்பு கேட்கப்படும் என்று மாலினி பார்த்தசாரதி கூறியிருந்தார்.

இது அந்த பத்திரிக்கை குழும நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்தே தனது பதிவிக்காலம் முடிவதற்கு முன்பே மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள நிர்மலா லக்ஷ்மன் ‘தி இந்து’ நாளிதழில் பல ஆண்டுகளாக செய்தி ஆசிரியராகவும் கஸ்தூரி மீடியா லிமிடெட் நிறுவனத்தில் தலைவராகவும் இருந்துள்ளார். தி இந்து குழுமத்தின் அடுத்த தலைவராக மூன்றாண்டுகள் இவர் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.