டில்லி

ஞ்சாப் நேஷனல் வங்கி கடனைத் திருப்பி செலுத்தும் அனைத்து வழிகளையும் அடைத்து விட்டதாக தொழிலதிபர் நிரவ் மோடி வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல தொழிலதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ரூ.11400 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இருந்தார்.    அதனால் வங்கி நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.   தற்போது வங்கி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.   இந்த மாதம் 15ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் வங்கியை குற்றம் சாட்டி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், “வங்கிக்கு எனது நிறுவனங்கள் தரவேண்டிய மொத்தக் கடன் தொகை ரூ.5000 கோடிக்கும் குறைவானது தான்.   வங்கி அவசரப்பட்டு இந்த கடன் விவரங்களை தவறாக வெளியிட்டது.  இதனால் எனது நிறுவனத்தின் பெயர் கெட்டு எனது தொழில் அடியோடு அழிந்து விட்டது.   அதனால் என்னிடம் இருந்து கடனை திரும்பப் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துள்ளது.

ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்பு செய்திகளாலும் வங்கிகளின் அவசர புகார்களாலும்  பல்வேறு விசாரணை அமைப்புகள் எனது நிறுவனங்களில் சோதனை செய்து உடனடியாக பல சொத்து பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.  எனது வர்த்தகம் முழுமையாக முடங்கி விட்டது.

எனக்கு கடன் உத்திரவாதம் அளித்ததற்காக நான் இது வரை கோடிக்கணக்கில் வங்கிக் கட்டணங்கள் செலுத்தி இருக்கிறேன்.

இந்தியாவில் உள்ள எனது தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களின் மதிப்பே சுமார் ரூ.6500 கோடிக்கு மேல் ஆகும்.   அவற்றை விற்றாலே நான் எனது வங்கிக்கடன் தொகையை செலுத்த முடியும்.    இப்போது அதற்கான காலம் கடந்து விட்டது.

மேலும்  வங்கிக்கும் எனக்கும் உள்ள நிதி விவகாரங்கள் என் குடும்பத்தினருக்கு தெரியாது.    ஆனால் என் மனைவி, மாமா மற்றும் சகோதரர் பேரில் தவறான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன

எனது நிறுவன பணியாளர்கள் 2200 பேருக்கு நான் ஊதியம் வழங்க வேண்டும்.   அதற்காக எனது நடப்புக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள் அனுமதிக்கவேண்டும்”  என நிரவ் மோடி வங்கி மீது குற்றச் சாட்டுகளை அடுக்கி உள்ளார்.