டில்லி:

மிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. மேலும், தலைமை செயலாளர் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கில் தமிழகஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பசுமை தீர்ப்பாயம், குறிப்பிட்ட காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் ஓடும் நீர்வழித்தடங்களான கூவத்தை முழுமை யாக சீரமைத்து மீட்டெடுக்க பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014-15-ம் ஆண்டு பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பு ரூ.ஆயிரத்து 934 கோடியே 84 லட்சம் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்துவ தற்கு முதல்கட்டமாக ரூ.604 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இத்திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து கூவம் ஆற்றை தூர்வாரி, கழிவு நீர் கலப்பதை தடுத்து சீரமைக்கும் பெருந்திட்டத்துக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், இந்த பணிகள் சரிவர நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  சென்னை பெருநகரம் நகர மயமாதலின் காரணமாக, கழிவுநீர் பூமிக்குள்ளும், நீர்வழித் தடங்களிலும் விடப்பட்டு, நீராதாரங் கள் மற்றும் நீர்வழித்தடங்கள் மாசடைந்து வருகின்றன.

நீராதாரங்களை மீட்கவும், பசுமை சூழலை உருவாக்கவும் 214 கிமீ நீர்வழிப்பாதை, 42 நீராதாரங்களை தூர்வாரி, அவற்றில் இணையும் கழிவுநீர் பாதைகளை வேறு பாதையில் திருப்பி, திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தி, ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி,   58 ஏக்கர் பரப்பிலான அடையாறு சிற்றோடை பகுதி சீரமைக்கப்பட்டும், அதைத் தொடர்ந்து 300 ஏக்கர் பரப்பிலான அடையாறு உப்புநீர் பகுதி சூழல் மேம்பாடு திட்டம் முடியும் தறுவாயில் உள்ளது.  அடையாறு ஆற்றின் 42.5 கிமீ தூரத்துக்கான சீரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு 32 கிமீ நீளமுள்ள கூவம் ஆற்றின் சூழல் சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

கூவம் ஆற்றில் விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், டிரஸ்ட்புரம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் வந்து இணை கின்றன. இவற்றில் பெரும்பாலும் கழிவுநீர் வந்து சேருவதால் கூவம் மாசடைகிறது. இதை தடுத்தால் மட்டுமே, கூவத்தை சீரமைக்க முடியும் என்பதில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுதியாக உள்ளது.

இதையடுத்து, கூவத்தை முழு மையாக சீரமைக்கும் வகையில், கழிவுநீர் வெளியேற்றத்தை இடை மறித்து, அதன் பாதையை திருப்பு தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் கூவம் மாசடைவது தடுக்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனுதாரரான சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம், தமிழகஅரசு கூவம் சுத்தம் படுத்தப்படும் என அறிவித்து 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இதுவரை பணிகள் முடிவடையவில்லை என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது என்றும் கூறி உள்ளார்.