டில்லி:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள்  உயிரிழந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க அப்போலோ நிர்வாகம் முன்வந்துள்ளது.

நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், அவந்திப்போரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது  தற்கொலை படை பயங்கரவாதி  குண்டு நிரப்பிய காருடன் வந்து  நடத்திய தாக்குதலில்,  44 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும்,  20க்கும் மேற்பட்ட  வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், காயமடைந்த வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக தலைவர் பிரதாப் ரெட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளவர், பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும், நாட்டுக்கு உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தனது வணக்கத்தை தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும், இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி  காயமடைந்துள்ள சிஆர்பிஎப் வீரர்கள் நாடு முழு வதும் உள்ள எந்தவொரு அப்போலோ மருத்துவனையிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம், என்றும் தெரிவித்து உள்ளார்.