டில்லி:

ற்போது நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்தி தேர்வு செய்து வரும் மத்திய அரசு, இனிமேல் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக நெக்ஸ்ட் (National Exit Test) எனப்படும் புதிய தகுதி தேர்வை அமல்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.  தற்போது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக நெக்ஸ்ட் எனப்படும் தகுதி தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஏழை மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது/

மத்திய சுகாதார அமைச்சகம்  தற்போது செயல்பட்டு வரும், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, அதற்கு  மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்போவதாக மக்களவையில் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு  கொண்டு வர உள்ள வரைவு மசோதவில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வானது நாடு முழுவதும் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்’ (நெக்ஸ்ட்) என்ற பொது தேர்வு நடத்தப்படும் என்றும், அந்த தேர்வு மதிப்பெண்கள் அடைப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு  நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

இந்த தேர்வில் ஏழை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.