18ந்தேதி குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு

Must read

பெங்களூரு:

ர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு எதிராக வரும் 18ந்தேதி (வியாழக்கிழமை)  நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசிலிருந்து 16 காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் என இதுவரை 18 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ள நிலையில், அவர் கடிதம் தொடர்பாக முடிவு எடுக்க மறுத்தார். இதையடுத்து உச்சநீதி மன்றத்தை அதிருப்தி எம்எல்ஏக்கள் நாடினர். அதைத்தொடர்ந்து,  ராஜினாமா கடிதங்கள் மீது முடிவெடுக்க சபாநாய கருக்கு உச்சநீதிமன்றம் நாளை வரை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தின் போது தாம் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயாராக உள்ளதாக  முதல்வர் குமாரசாமி அறிவித்தார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, தற்போது, இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினர்.

இதுகுறித்து  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் குமார், சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கினார். இது தொடர்பாக அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என சபாநாயகர் பதில்அளித்திருந்தார்.

இந்த  பரபரப்பான சூழ்நிலையில்,  அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் விதான சவுதா வந்தனர்.

கர்நாடக காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்.  இவர்கைளில்  18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆக  குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான் மையை நிரூபிக்க 105 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது. சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 உறுப்பினர்கள் மற்றும் 2 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் ஆளும் கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார்.  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

ஆனால், அப்படி ஏதும் நடைபெறாத நிலையில், சட்டமன்ற கூட்டம் முடிந்ததும்,   பாஜகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதத்திற்கு பிறகு சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி வரும் 18ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீதாஉன நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது அன்றைய தினம் தெரிய வரும்.

More articles

Latest article