சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டில்லியில் அடுத்த மாதம் 4 ஆம்  தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்ட் மாதம்  4 ஆம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்துகிறார். இந் கூட்டத்துக்கான அழைப்பிதழைக்  கட்சி மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து முக்கிய நிர்வாகிகளுக்கும் அனுப்பி உள்ளது.

கூட்டத்தில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை எவ்வாறு அமைப்பது என்று விவாதிக்கப்பட உள்ளது. மேலும் எந்தெந்த விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தேர்தல் பொதுக்கூட்டங்களில் அழைத்து பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு aவெற்றி வாய்ப்பு உள்ள மேலும் 5 தொகுதிகளைக் கேட்பது குறித்தும், பா.ஜ.க.வின் தேர்தல் அணுகுமுறையை எதிர்கொள்வது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் என்ன என்பவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்படுவார் என்ற பரபரப்பு அண்மைக் காலத்தில் நிலவி வந்த நிலையில், தற்போது அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமனம் நீண்ட நாட்களாகச் செய்யப்படாமல் இருந்து வருகிறது. அறக்கட்டளை உறுப்பினர் யசோதாவின் மறைவுக்குப் பின்னரும், ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் பா.ஜ.க.வில் இணைந்த பின்னும் அவர்களின் உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. மேலும் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் மறைவுக்குப் பின்னர் அந்த பதவிக்கும் போட்டி உருவாகி உள்ளது.

இவை அனைத்தும் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.