சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய உட்பிரிவான ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் புதிய வகை கொரோனா மத்திய பிரதேசத்தில் பரவ தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் பரவி உள்ளதா என்பது குறித்து ஆய்வில், தெரிய வரும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
உலக நாடுகளை கடந்த இரு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது உருமாற்றம் அடைந்து பல்வேறு வகை களாக பரவி வருகிறது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், தற்போது அதன் உட்பிரிவு கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு ஸ்டெல்த் ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்றை கண்டறிவதில் சிரமம் உள்ளதாக கூறும் ஆய்வாளர்கள், இந்த BA.2 ஓமிக்ரானில் டெல்டா கொரோனாவை போல எஸ் ஜீன் உள்ளதால் இதைக் கண்டறிவது சிரமம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஒமிக்ரான் தொற்று பரவலை விட வேகமாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்று மத்திய பிரதேசத்தில் பலருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பரவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஓமிக்ரன் புதிய வகையான வைரஸ் எல்லாம் இல்லை. அது ஒரு வகை யான கொரோனா வைரஸ்தான். அதேபோலத்தான் ஸ்டெல்த் ஒமிக்ரானும். ஓமிக்ரான் வைரசில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒரு வகை தான் BA.2. இந்த BA.2. ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாகப் பரவும் திறன் கொண்டது. ஆனால்,தீவிர பாதிப்பு ஏற்படுத்தாது என்றார்.
நமது நாட்டில், மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துகள் இருக்கும் போது, இந்த வகை கொரோனா தமிழ்நாட்டிலும் பரவுவது இயல்பானது தான். அதனால், இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றவர், கொரோனா வைரசைப் பொறுத்தவரை அது உருமாறும் போது, வைரஸ் பரவும் வேகம், பாதிப்பு தன்மை மாறுகிறது. அதுபோல, ஓமிக்ரான் கொரோனா நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இந்த வகை தொற்று தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நடத்தப்படும் ஆய்வுகளால் இது தெரிய வரலாம் என்றவர், டெல்டா கொரோனா இன்னும் கூட மக்களிடையே உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒரே வழி டெல்டா தொடங்கி எந்த உருமாறிய கொரோனா பரவல் ஏற்பட்டாலும் மாறாமல் இருப்பது ஒன்று தான்.
பொதுமக்கள் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தால் உருமாறிய கொரோனாவையும் எளிதாக வீழ்த்தலாம் என்றார்.