டில்லி

டில்லியில் கட்டப்படவுள்ள செண்டிரல் விஸ்டா என்னும் புதிய நாடாளுமன்ற கட்டிடச் செலவு 29% உயர்ந்து மொத்தம் ரூ.1260 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதாகும்.   தற்போது இந்த கட்டிடத்தில் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு உகந்ததாக இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் போன்றவற்றுக்கு இடவசதி இல்லை எனவும் கருத்து எழுந்தது.  இதையொட்டி புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.

செண்டிரல் விஸ்டா என்னும் இந்த கட்டிடப் பணிகள் கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்டன.   இத திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகள் டாடா பிராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.    பல திட்டங்களுக்கு கொரோனா பரவல் காரணமாகத் தடை விதிக்கப்பட்ட போதிலும் இதற்குத் தடை விதிக்கப்படவில்லை.

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து அனுமதி  பெற்றுள்ளது.   இந்த கட்டிடம் வரும் 75 ஆம் சுதந்திர தினத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது.  அதன் பிறகு அக்டோபரில் காலக்கெடு நீட்டிக்கபட்டுள்ளது.  இதுவரை இந்த திட்டத்தில் 40% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் தொடங்கும் போது இதற்கான செலவு ரூ.977 கோடி என மதிப்பிடப்பட்டது.  தற்போது இந்த திட்டம் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது.  இந்நிலையில் அரசு தரப்பில் இந்த கட்டிடச் செலவுகள் மேலும் 29% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இதன்படி ரூ.282 கோடி அதிகரித்து மொத்த செலவு ரூ.1260 கோடியைத் தொடும் என கூறப்படுகிறது.