புதுடெல்லி: நாட்டிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளை நிர்வகித்தல் மற்றும் அதுதொடர்பாக எழும் சிக்கல்களை கையாளும் வகையில், ஒரு புதிய சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மெட்ரோ வழித்தடங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துதல், சுங்கவரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அந்த சட்டத்தின் மூலம் கையாளப்படும்.

மெட்ரோ பில் என்றழைக்கப்படும் இந்த வரைவுச் சட்டம், பொதுமக்களின் கருத்திற்காக, அடுத்த மார்ச் மாதம் பொதுவில் வைக்கப்படும். இந்த சட்டமானது, கடந்த 2002ம் ஆண்டு மெட்ரோ ரயில்வேஸ் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்படுவதாகும்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்த சட்ட வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைகளை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் செயல்பாட்டினை இந்த சட்டம் நெறிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.