வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த சிலரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி மற்றும் புனேவைச் சேர்ந்த 3 பேரிடம் இருந்து குழந்தைகளை வாங்கிய 8 பெண்கள் உள்பட 11 பேரை ரச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட்டிற்குட்பட்ட மெடிப்பள்ளி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஒரு மாதம் முதல் இரண்டரை வயது வரை உள்ள 11 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது அதில் ஒன்பது பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் அடங்கும்.

இதுகுறித்து கிரேட்டர் ஹைதராபாத் ரச்சகொண்டா காவல் ஆணையர் தருண் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் டெல்லியைச் சேர்ந்த கிரண் மற்றும் ப்ரீத்தி மற்றும் புனேவைச் சேர்ந்த கன்னையா ஆகியோரிடம் இருந்து குழந்தைகளைப் பெற்று அந்த குழந்தைகளை பிரச்சினையற்ற தம்பதிகளுக்கு விற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு அந்த மூவரும் கிட்டத்தட்ட 50 குழந்தைகளை வழங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகவர்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குழந்தைகள் தேவைப்படும் நபர்களுக்கு மத்தியஸ்தர்கள் உதவியுடன் ஒரு குழந்தை ரூ.1.80 லட்சம் முதல் ரூ.5.50 லட்சம் வரை விலைக்கு விற்று வந்தனர்.

ரூ. 4.50 லட்சத்துக்கு குழந்தையை விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஷோபா ராணி என்ற பயிற்சி மருத்துவர் கடந்த மே 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

ஷோபா ராணிக்கு உதவிய ஸ்வப்னா மற்றும் ஷேக் சலீம் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் போலீஸ் கமிஷனர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 370, 372,373 r/w 34 மற்றும் பிரிவுகள் 81,87 மற்றும் 88 சிறார் நீதிச் சட்டம் 2015 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், ஷோபாராணி ஹரி ஹர சேத்தனுடன் சேர்ந்து குழந்தைகளை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.

குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பண்டாரி ஹரி ஹர சேத்தன், பண்டாரி பத்மா, பால்கம் சரோஜா, முதவத் சாரதா, முதவத் ராஜு, பதான் மும்தாஜ் என்கிற ஹசீனா, ஜெகநாதம் அனுராதா, யாதா மம்தா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

https://x.com/nabilajamal_/status/1795681127342158187

கைது செய்யப்பட்ட அனைவரும் தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குழந்தைகளை டெல்லி மற்றும் புனேவை சேர்ந்த 3 பேர் தலா ரூ.50,000க்கு சப்ளை செய்தது தெரியவந்தது. கிரண், ப்ரீத்தி, கண்ணையா மற்றும் பிற குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் குழந்தைகளை வாங்கிய நபர்கள் அவர்களை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்துவந்த நிலையில் அந்த குழந்தைகளை போலீசார் மீட்டுச் சென்றதை அடுத்து வளர்ப்பு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தரக்கோரி காவல் நிலையம் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுதது மிகவும் வேதனையாக இருந்தது.