சென்னை:

திமுக பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற  தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  திமுக காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக் உள்பட பல கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியாக உருவெடுத்து உள்ளது.

அதே வேளையில், அதிமுக பாஜக கூட்டணியில், பாமக மட்டும் அதிகாரப்பூர்வமாக இணைந் துள்ளது. அதையடுத்து, புதிய தமிழகமும் இணைந்துள்ளது. அந்தகட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவை இழுக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று காலை  9 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை தந்தார்.

அங்கு, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து,  புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதற்கான உடன்பாடு கையெழுத்தானது.

புதிய நீதிக்கட்சி ஒரு நாடாளுமன்ற தொகுதியில், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.