டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருபவர் பிஷ்ணு பாண்டே (வயது 35), நேபாளத்தை சேர்ந்தவர். தனது வீட்டுக்காக வாங்கிய வங்கிக்கடனை அடைக்கும் நோக்கோடு கடின உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த ரூ.30,200 பணத்தை எடுத்துச் சென்று நேபாளத்தில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்த முயன்றபோது மத்திய அரசின் நோட்டு தடை காரணமாக அந்த வங்கி அந்த பணத்தை ஏற்க மறுத்துவிட்டது.

man_sad_shadow

இதனால் நொறுங்கிப்போன பிஷ்ணு செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இந்திய அரசின் நடவடிக்கையால் நிச்சயம் அதிகம் பாதிக்கப்பட்டது நான்தான். என்னிடம் வேறு பணம் இல்லை. குடும்பத்தை தொடர்ந்து கடனில் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டியதுதான் என்கிறார் துக்கத்துடன்.
இந்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கை நேபாளத்தில் நிறையவே பாதிப்புகளை விளைவித்திருக்கிறது. பிஷ்ணு பாண்டே போலவே இந்தியாவில் வந்து பணிபுரிந்து இந்திய சம்பளத்தை 1000 மற்றும்500 நோட்டுக்களாக சேர்த்துவைத்த நேபாள தொழிலாளர்கள் பணத்தை மாற்ற வழியறியாது தவித்து வருகின்றனர். இந்தியாவில் வந்து படிக்க விரும்பும் நேபாள மாணவர்கள், இந்தியாவில் வந்து சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள், புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஆகியோரும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் டிசம்பர் 30 வரை பழைய நோட்டை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் நேபாள வங்கிகளோ நோட்டுத்தடை அறிவிக்கப்பட்ட அந்த நாளிலிருந்தே இந்தியாவின் 500, 1000 நோட்டுக்களை ஏற்க மறுத்துவருகின்றன. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற பல கூர்க்கா வீரர்கள் தங்கள் பென்ஷனை இந்திய கரன்சியில் பெற்று வருகின்றனர்.
இந்த சூழலை சமாளிக்க உதவும்படி நேபாள பிரதமர் பிரசாந்தா, இந்திய பிரதமர் மோடியிடம் கடந்த வாரம் பேசினார். அவருக்கு உதவுவதாக மோடி வாக்களித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.