சென்னை:

நீட் விவகாரத்தில் தமிழக  மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் நிராகரித்து விட்ட நிலையில், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடுமலையை சேர்ந்த மாநில பாடத்திட்டத்தில் படித்த  கிருத்திகா என்ற மாணவி, தன்னை மருத்துவ  கலந்தாய்வுக்கு அனுமதிக்ககோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசை கடுமையாக சாடினார்.

உரிய நேரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்காததால்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்றும்,  தரவரிசைப்பட்டியலில் உள்ள சிபிஎஸ்சி, மாநில பாடத்திட்ட மாணவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,  தமிழக அரசு பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்யவும்,   நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கப்பட்ட தமிழக மாணவர்கள் குறித்து அறிக்கை தரவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு அரசு பெரும் அநீதி இழைத்துவிட்டது என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.