சென்னை: மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு, 97% கேள்விகள் மாநிலஅரசு பாடபுத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டு இருந்ததாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து உள்ளது.

நாடு முழுவதும்  கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வை நாடு முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்தும் 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

முன்னதாக நீட் தேர்வு பயம் காரணமாக 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், நீட் தேர்வில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படியே கேள்விகள் கேட்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,  நீட் தேர்வில் இடம்பெற்ற உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 97 சதவிகித வினாக்கள் மாநில அரசின் புதிய பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உயிரியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 90 வினாக்களில் 87 வினாக்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

வேதியியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 43 வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளது.

இயற்பியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 44 வினாக்களும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2018-2019-ம் ஆண்டு 11-ம் வகுப்புக்கான பாடப் புத்தகமும், 2019-2020-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும் புதியதாக வெளியிடப்பட்டது.

சிபிஎஸ்இஅ பாடத்திட்டத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டிருந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள் இந்த முறை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறைத் அதிகாரிகள் நம்பிக்கை யோடு தெரிவித்து உள்ளனர்..

செப்டம்பர் இறுதியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.