சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்புற பகுதியில் அமைந்துள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில், கட்டாய என்சிசி பயற்சியை அளிக்கும் முடிவை எடுத்துள்ளது அம்மாநில காங்கிரஸ் அரசு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாய என்சிசி பயிற்சி‍யை மாணாக்கர்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்கள் பிற்காலத்தில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளில் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருக்கும் என்பது மட்டுமில்லாமல், ஒழுக்கமும் பேணப்படும்.

முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்களும், கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணாக்கர்களும் கட்டாய என்சிசி பயிற்சியில் பங்கு பெறுவார்கள்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர், தான் தரன் மற்றும் அமிர்தசரஸ் போன்ற மாவட்டங்கள் எல்லைப்புற மாவட்டங்களாகும். இவை பாகிஸ்தானை ஒட்டிய சர்வதேச எல்லையருகே அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் 365 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 365 மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை அமைந்துள்ளன.