புதுடெல்லி: பணித்திறன் குறைந்த மற்றும் குற்றசாட்டிற்கு உள்ளான அரசு உயரதிகாரிகளை, கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த மாதம், வரித்துறையிலிருந்து முதல்வர் மற்றும் முதன்மை ஆணையர்கள் நிலையிலிருந்த 27 மூத்த அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பியது அரசாங்கம். அவர்களில் பெரும்பாலானோர் ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள்.

அனைத்து மத்திய அரசின் துறைகளும், எந்தெந்த அதிகாரிகளின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது மற்றும் யாருடைய பணிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான அறிக்கையை மாதந்தோறும் அனுப்பி வைக்க வேண்டுமென பயிற்சி மற்றும் பணியார்கள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய பயிற்சி மற்றும் பணியாளர்கள் துறையானது, பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக அறிக்கை தரக்கூடியது. அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான (பணியமர்த்துதல், பயிற்சியளித்தல், பணிநிலை மேம்பாடு மற்றும் பணி ஓய்வு) அனைத்து விஷயங்களிலும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

போதுமான செயல்திறனின்றியும், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறான முறைகேட்டுப் புகார்களுக்கும் ஆளான அதிகாரிகள் விஷயத்தில் மத்திய அரசு கறாராக இருப்பதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.