சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீ வைகுண்டநாதர் (கள்ளபிரான் சுவாமி) திருக்கோவில்:  சூரிய ஸ்தலமான இத்திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

விஜயாசன பெருமாள் திருக்கோவில் (வரகுணமங்கை): சந்திர ஸ்தலமான இத்திருக்கோவில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்:  செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில்: புதன் ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் திருப்புளியங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்: குரு ஸ்தலமான இத்திருக்கோவில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில்:  சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோவில்: சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில் (இரட்டை திருப்பதி): ராகு ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில் (இரட்டை திருப்பதி): கேது ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோவில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோவில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.