கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணம் நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த யாத்திரை இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருக்கும் சோனியா காந்தி, இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தருணத்தில் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் இந்திய மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது தவிர பொருளாதார நிலையில் மிகவும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இந்த அவலங்களை களைய இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டி 12 மாநிலங்கள் வழியே 150 நாட்களில் 3570 கி.மீ. நடைபயணம் செய்ய உள்ளார் ராகுல் காந்தி.

பாரம்பரியமிக்க ஒரு மாபெரும் கட்சிக்கு இது ஒரு முக்கிய சந்தர்ப்பம். இதன்மூலம், இந்திய தேசிய காங்கிரஸ் புத்துயிர் பெறும் என்று தான் நம்புவதாக சோனியா காந்தி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய ஒற்றுமை பயணத்தில் நான் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தினமும் அதைப் பற்றிய சிந்தனையுடன் இருப்பேன். யாத்திரை குறித்த ஒவ்வொரு நிகழ்வையும் கவனிப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.