டில்லி

டில்லி காவல்துறைக்கு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  மேலும் கடந்த 2 வாரமாக அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், கைது செய்யக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.  டில்லி காவல்துறையினர் மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

தற்போது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து டில்லி காவல்துறைக்குத் தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  ஏன் மல்யுத்த வீரர் கூட்டமைப்பு தலைவர் மீது வழக்குப் பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியது. இந்த சம்மன் தொடர்பாக மே.12-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் டில்லி காவல்துறை விளக்கம் தர மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.