பாட்னா

பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி முதல்வர் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சாதி வாரிக் கணக்கெடுப்பு பீகார் மாநில அரசு நடத்தியுள்ளது. நேற்று இது தொடர்பான விரிவான அறிக்கை அந்த மாநில சட்டசபையில்  முன்வைக்கப்பட்டது.  அதன் மீது விவாதம் பீகார் சட்டசபையில் நடந்துள்ளது.

விவாதத்தில் முதல்வர் நிதிஷ்குமார்,

‘மாநிலத்தில் இதர பிற்பட்டோருக்கான (ஓ.பி.சி.) இட ஒதுக்கீடு 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கான இட ஒதுக்கீடு 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். 

இதுதொடர்பாக, உரிய ஆலோசனைக்குப் பிறகு தேவையானதைச் செய்வோம். இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான சட்ட மசோதாவை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே கொண்டுவர எண்ணியுள்ளோம்.” 

என்று கூறினார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பேசும்போது பெண்கள் குறித்து நிதிஷ்குமார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவர் இதற்கு மன்னிப்பு கோரி உள்ளார். ஆயினும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சபாநாயகருக்குப் பரபரப்பான கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில்,

“பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பொறுப்பான ஒரு பதவியில் இருந்தும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதைத் தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் பேசிய பேச்சைச் சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.