தமிழ்நாட்டின் ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தடையில்லா சான்று வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சுமார் 150 மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவக் கவுன்சில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் சரிவர பொருத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டி அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்ட நிலையில் இதற்கான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

இதனையடுத்து இவ்விரு கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்து வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் முன்வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

85 ஆண்டுகள் பழமையான ஸ்டான்லி மருத்துவமனை இதுவரை எத்தனையோ அடிதடி ரணகளம் வெட்டு குத்துப்பட்டு உயிருக்கு ஆபத்தான வந்த நோயாளிகளை எல்லாம் காப்பாற்றிய நிலையில் சிசிடிவி கேமரா குறித்து விளக்கம் கேட்டு வந்த நோட்டீசை அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக மிகைப்படுத்தி கூறிவருவதாக குற்றம்சாட்டினார்.