டில்லி

தேசிய இயற்கை எரிபொருள் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிபொருள் தயாரிக்க அரசு வெகுநாட்களாக திட்டமிட்டுள்ளது.   இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வெற்றி பெற்றுள்ளன.   இயற்கை எரிபொருள் தயாரிப்பு மற்றும் அதன் உபயோகம் குறித்த கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சகம் இந்த கொள்கைகளை ஆய்ந்து இதற்கு ஒப்புதல் அளித்தது.   இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “இந்த கொள்கை மூலம் இயற்கை எரிபொருள் கரும்புச் சாறு கரும்புச் சக்கை, வீணான அரிசி மற்றும் கோதுமை,  சோளம் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு தயாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.    தேவைக்கு அதிகமாக உள்ள உணவு தானியங்களை தேசிய இயற்கை எரிபொருள் கழகம் விலைக்கு வாங்கி அதன் மூலம் இயற்கை எரிபொருள் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமையலுக்கு உதவாத எண்ணெய் விதைகள், உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டும் இந்த இயற்கை எரிபொருள் தயாரிக்க முடியும்.   இவ்வாறு தயாரிக்கப்படும் எரி பொருளை பெட்ரோலுடன் கலந்து உபயோகிப்பதால் ஒரு லிட்டருக்கு ரூ.28 வரை அன்னிய செலாவணி மிச்சப்படுத்த முடியும்.    இந்த வருடம் இயற்கை எரிபொருள் சுமார் 150 கோடி லிட்டர் தயாரிக்கப்பட உள்ளது.  இதனால் சுமார் ரூ.4000 கோடிக்கு மேல் அன்னிய செலாவணி மிச்சமாகும்.

அத்துடன் தற்போது விவசாயக் கழிவுகள் மற்றும் கெட்டுப்போன தானியங்களை விவசாயிகள் எரித்து விடுகின்றனர்.  அதனால் காற்று மிகவும் மாசு படுகிறது.  அந்த பொருட்களைக் கொண்டு இயற்கை எரிபொருள் தயாரிப்பதால் காற்று மாசு அடைவது குறையும்.    மேலும் இது போன்ற பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு பணவரவு உண்டாகும்.   முக்கியமாக இயற்கை எரிபொருள் உற்பத்தி துறையில் பெருமளவு வேலைவாய்ப்புகள் உண்டாகும்”  என தெரிவித்துள்ளார்.