பெங்களூரு:

கர்நாடக முதல்வராக காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்கிறார். அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் அங்கு இழுபறி உருவானது.

இதைத்தொடர்ந்து 3வது இடத்தை பிடித்த  குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளித்தது. குமாரசாமியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார். இந்நிலையில்  ஆளுநர் பாஜகவையே ஆட்சியமைக்கும்படி அழைத்துள்ளார்.

அதன்காரணமாக இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்கிறார்.  சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.

இதன் பின்னர் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எடியூரப்பா அவருடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார்.

எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் முழு அமைச்சரவை பதவியேற்கும் என்று கர்நாடக பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ் கூறினார்.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்கப் போவதை அறிந்து காவல்துறை டிஜிபி , பெங்களூரு காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் நேற்றிரவு எடியூரப்பா வீட்டுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் அவரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்கும் எடியூரப்பா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.