புதுடெல்லி:
கொரோனா விவகாரத்தில் நடுத்தர மக்களிடம் மோடியின் செல்வாக்கு 13% சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு மார்ச்சில் பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு அறிவித்த பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. அதேபோல் 2020 அக்டோபரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டு மக்களின் சராசரி குடும்ப வருமானம் முந்தைய ஆண்டை விட 12% குறைந்தது. நடுத்தர மக்களும் பொருளாதா ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 2024ம் ஆண்டு வரை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இருக்காது என்றாலும் கூட, சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் பாஜக பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

தற்போதைய கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட் (Morning Consult) என்ற நிறுவனம் ‘குளோபல் லீடர்ஸ்’ பட்டிலில் உள்ள பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஆகஸ்ட் 2019 முதல் ஜனவரி 2021 வரை நடுத்தர மக்களிடம் ேமாடியின் செல்வாக்கு 80% ஆக இருந்தது. இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த மதிப்பீடு 67% ஆகக் குறைந்துள்ளது. அதாவது மோடியின் செல்வாக்கு 13% அளவிற்கு குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம் உட்பட சில மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், தற்ேபாது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இதற்கு காரணம், கொரோனா நெருக்கடியை சரியாக எதிர்கொள்ளாததாலும், நிலைமையின் தீவிரத்தை புறக்கணித்ததாலும் பாதிக்கப்படலாம். கடந்த 2006 முதல் 2016ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வறுமைக் கோட்டிற்கு கீழிருந்த 27.30 கோடி மக்கள் நடுத்தர வர்க்கத்தில் சேர்ந்துள்ளனர். நடுத்தர வர்க்க மக்கள் தொகை சுமார் 60 கோடியாக உள்ளது. இவர்களில் மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், சிறு வணிகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். இன்றைய கொரோனா பாதிப்பில், நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்து வந்தனர்.

ஆனால், இப்போது அவர்கள் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லோக்னிட்டியின் இணை இயக்குனர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘பிரதமர் மோடி மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளார். இவர்களில் நடுத்தர வர்க்க மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் அலுவல் ரீதியான பணியை விரும்பாதவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டு ஆகஸ்டில் 12% ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 28% ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிக கவனம் செலுத்தவில்லை. அவர் மக்களை கைவிட்டுவிட்டார்’ என்றார்.

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜய் குமார் கூறுகையில், ‘கொரோனா முதல் அலையில் சில இறப்பு செய்திகளை மக்கள் கேள்விப்பட்டார்கள். ஆனால், இப்போது அவர்களது சொந்த குடும்பங்களில் உள்ளவர்களே இறந்து வருகின்றனர்’ என்றார். மேலும், டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘என்னிடம் ஏராளமான நடுத்தர வர்க்க மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் தந்தை, தாய், குழந்தைகள் அல்லது மனைவியின் உயிரை காப்பாற்ற கெஞ்சுகிறார்கள்.

பெண் மருத்துவர் ஒருவர், தனது தாயை மருத்துவமனையில் அனுமதிக்க மூத்த மருத்துவர்களிடம் மன்றாட வேண்டி உள்ளது. ரூ. 10 ஆயிரம் கொடுத்தும் ரெம்டெசிவிர் ஊசி பெறமுடியவில்லை’ என்று கோபத்துடன் கூறினார்.