பிரிக்ஸ் மாநாட்டில் மோடியின் முயற்சிகள் தோல்வியா?

Must read

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8–வது மாநாடு கோவா மாநிலத்தின் கடற்கரை கிராமமான பெனாலிமில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

brics

இம்மாநாட்டில் இந்தியாவின் அண்டைய நாடு “பயங்கரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் திகழ்கிறது” என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பாகிஸ்தானை மறைமுகமாக சாடிபேசினார். மாநாட்டில் இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இதில், ‘பயங்கரவாத எதிர்ப்புக்கு பிரிக்ஸ் நாடுகள் முன்னுரிமை அளிப்பது’ என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோடி பயங்கரவாதம் குறித்து அதிகம் பேசினார் ஆனால் பாகிஸ்தானை குறிப்பிட்டு பேசாமல் அண்டைநாடு என்று மறைமுகமாக சாடியது எந்த அளவிற்கு இந்தியாவின் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று தெரியவில்லை. இதன் விளைவாக சிரியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது ஆனால் பாகிஸ்தானை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்துவைத்து பேசக்கூட யாரும் முன்வரவில்லை.
மாநாட்டின் இறுதியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தில் ‘பயங்கரவாத எதிர்ப்புக்கு பிரிக்ஸ் நாடுகள் முன்னுரிமை அளிப்பது’ என்பது வழக்கமான பொத்தாம் பொதுவான ஒரு பிரகடனமாகும். சிரியாவின் பெயர் உச்சரிக்கப்படுவதை ரஷ்யா விரும்பியதால் சிரியா குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசுவதை சீனா விரும்பாதபடியால் அந்நாட்டின் பெயர்கூட அங்கு உச்சரிக்கப்படவில்லை. பயங்கரவாதிகளின் தாயகம் என்று மறைமுகமாக சாடி பேசுவதால் என்ன நன்மை நேரிட்டுவிடப் போகிறது?
பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா தனது நோக்கத்தை நிறைவேற்றுவதை சீனா கெடுத்து விட்டது என்றே சொல்லலாம். பாகிஸ்தான் “பயங்கரவாதம் தோன்ற மூலகாரணம்” என்று அடிக்கடி இந்தியாவை குற்றம்சாட்டுவதுண்டு. அதே வார்த்தையை குறிப்பிட்டு சீனா அம்மாநாட்டில் மறைமுகமாக இந்தியாவை இடித்துரைத்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு பக்கபலமாக இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்படுவதை முன்னெப்போதையும்விட இப்போது அதிகம் உணர முடிகிறது. மிகவும் தெளிவாக இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே தீவிரவாதத்தால் பாதிக்கபட்ட நாடுகள் என்று சொல்லி பாகிஸ்தானையும் அப்பாவியாக காட்டும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
அதே வேளையில் சார்க் அளவுக்கு கூட பிரிக்ஸ் கூட்டமைப்பால் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. சார்க் நாடுகள் புவியியல் ரீதியாக ஒன்றுக்கொன்று அண்டை நாடுகள், அனால் பிரிக்ஸ் அப்படியல்ல. பொருளாதார ஒத்துழைப்புக்காக உருவாக்கப்பட்ட் இவ்வமைப்பு கடந்த பத்தாண்டுகளில் பெரிதாக எதையுமே சாதிக்கவில்லை.
இச்சூழலில் மோடியின் பிரிக்ஸ் பேச்சினாலேயோ அல்லது அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொத்தாம் பொதுவான தீர்மானத்தினாலேயோ எந்த பெரிய நன்மையும் இந்தியாவுக்கு விளைந்து விடப்போவதில்லை என்று சில அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article