ரியலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நந்தினி என்ற சிறுமியை கொச்சைப்படுத்தி பேசிய அ.தி.மு..க. பிரமுகர் நிர்மலா பெரியசாமிக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

அரியலூரைச் சேர்ந்த நந்தினி என்ற 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி, நெருங்கிப் பழகினார் மணிகண்டன் என்ற இளைஞர். இதனால் நந்தினி கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தினார். ஆனால் நந்தினி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்று காரணம் சொல்லி திருமணத்துக்கு மறுத்தார் மணிகண்டன்.

தொடர்ந்து திருமணத்துக்கு நந்தினி வற்புறுத்தவே, அவரைக் கடத்திச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு வன்புணர்வு புரிந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டார் மணிகண்டன்.

இவர் அரியலூர் மாவட்டத்தில் இந்துமுன்ணணி அமைப்பைச் சேர்ந்தவர். தனது இந்துமுன்னணி சகாக்களுடன் சேர்ந்து இந்த கொடூரத்தை செய்துள்ளார். தற்போது  இவரும் சகாக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரத்துக்கு மூளையாக செயல்பட்டதாக, அரியலூர் மாவட்ட இந்துமுன்னணி தலைவர் ராஜசேகர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அவரைக் கைது செய்ய வேண்டும் என போராட்டங்ள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில், நந்தினி விவகாரம் குறித்து விவாதம் நடந்தது.

இதில் கலந்துகொண்டவர்களில் அதிமுக பிரமுகரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான நிர்மலா பெரிய சாமியும் ஒருவர்.

இவர் பேசும்போது, “நந்தினி ஒரு சிறுமி. இந்த வயதிலேயே அவளுக்கு காதல் வந்திருக்கிறது. நெருங்கிப் பழகி கர்ப்பமாகியிருக்கிறார். அவரது பெற்றோர் அவரை ஒழுக்கமாக வளர்க்கவில்லை” என்று பேசினார்.

இவரது பேச்சுக்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

“புரிந்தும் புரியாத வயதில், ஆசை வார்த்தை காட்டி  காதல் என்கிற பெயரில் ஏமாற்றப்பட்டு, கொலையும் செய்யப்பட்டிருக்கிறார் நந்தினி என்கிற சிறுமி. இதைப் புரிந்துகொள்ளாமல் நிர்மலா பேசியது தவறு. அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று நெட்டிசன்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.