நாமக்கல்

நாமக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழக அரசு தெரிவித்த குடும்ப கடனான ரூ.2.63 லட்சத்தைத் திருப்பித் தர முன் வந்துள்ளார்.

நேற்று தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல தியாகராஜன் 2020 – 21 ஆண்டின் “வெள்ளை அறிக்கை” மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.  நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனருமான ரமேஷ் தியாகராஜன் அதை அடைக்க முன் வந்துள்ளார்.

அவர் தனது குடும்பத்திற்கான பங்கினை, அதாவது 2,63,976 ரூபாய்க்கான தொகையைக் காசோலையாக நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியரைச் சந்தித்து வழங்க வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.  அந்நேரத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் கோட்டை குமாரைச் சந்தித்த போது அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட அறிவுறுத்தினார்

எனவே ரமேஷ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அவர்களைச் சந்தித்து வழங்கிடச் சென்றார். அங்கு ஆட்சியர் இல்லாத நிலையில் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின் காசோலையை வழங்காமல் ரமேஷ் திரும்பிச் சென்றார்.

ஆர்வலர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதற்காக எனது குடும்பத்திற்கான கடன் தொகையைக் காசோலையாக வழங்க உள்ளேன். எனக்குக் கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டின் நகலைத் தரவேண்டும்.

இக்கடனைச் செலுத்த முன்வரும் வசதியற்ற வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூ 15 லட்சம் குடும்ப கடனாக மீண்டும் கொடுத்து குடும்பமாகச் சேர்ந்து சுயதொழில் செய்து, தமிழ் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கவும், தனி நபருடைய வருமானத்தைப் பெருக்கி, வறுமையையும், ஏழ்மையையும், போக்குவதற்குக் கோரிக்கையையும் முன் வைத்து  எனது குடும்பத்தின் சார்பாக இந்த தொகையை வழங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.