சென்னை: தமிழக சட்டமன்றத்தல் இன்று நீட் தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்து பேசப்பட்டதால், சபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை  10 மணியளவில் தொடங்கியது. இன்று  கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை குறித்து விவாதம் நடைபெற்றது.

இன்றைய பூஜ்ய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இந்த விவாதத்தில் அனைத்துக்கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது,  அதிமுகவினர், நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்குகளில், நீட் தேர்வுக்கு  ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தானே வாதாடினார் என்று குற்றம் சாட்டினர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நளினி சிதம்பரம் குறித்து கூறிய தகவல்களை, சபாநாயகர் நீக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து,   காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.