கோகிமா: நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளான சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள்  ஆதரவு தெரிவித்து உள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்ஈடுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. இதையடுத்து நாகலாந்து முதல்வர் தலைமையிலான ஆதரவு கட்சியினர், டெல்லி சென்று உள்துறைஅமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.

மார்ச் 2 ம் தேதி வெளியான நாகாலாந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, 60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் என்டிபிபி 25 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 12 இடங்களிலும் வென்றதால், அக்கூட்டணி 37 இடங்களைப் பெற்றது. இதனால்,  நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.

இங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 37 தொகுதிகளை இந்தக் கூட்டணி கைப்பற்றி இருப்பதால், அவை மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளன. தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெபியூ ரியோ மீண்டும் முதல்வராக உள்ளார். இந்த இரு கட்சிகளைத் தவிர வலிமையான வேறு கட்சிகள் இங்கு இல்லாதது இவ்விரு கட்சிகளுக்குமே மிகப் பெரிய பலமாக இருந்துள்ளது.

மேலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்பிபி 5 இடங்களிலும், எல்ஜேபி (ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி மற்றும் குடியரசுக் கட்சி(அத்வாலே) ஆகியவை தலா இரண்டு இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால், இந்த அனைத்துக் கட்சிகளும் ஆளும் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக அறிவித்து உள்ளார். இதனால், நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு!

நாகலாந்து சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ், நெய்பியூ ரியோ தலைமையிலான என்டிபிபிக்கு சனிக்கிழமையன்று நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் கடிதத்தை சமர்ப்பித்தது என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏ மோன்பெமோ ஹம்ட்சோ தெரிவித்தார். இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான நாகா மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அச்சும்பெமோ கிகோன், புதிய அரசுக்கு ஆதரவு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், ” எங்கள் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் என்டிபிபி-பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதால், நாகாலாந்தில் மற்றொரு முறை அனைத்துக் கட்சி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2021ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் இல்லாத அரசாங்கங்கள் நாகாலாந்து ஆட்சியின் போது அமைக்கப்பட்டன. ஆனால் பதவியேற்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் இல்லாத முதல் சட்டசபை இதுவாகும்.

2022 நாடாளுமன்ற தேர்தலில் வலிமையான பாஜகவை எதிர்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 1ந்தேதி சென்னையில் நடைபெற்ற தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பெரிதம் எதிர்பார்க்கப்பட்ட, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் போன்றோர் பங்கேற்காகது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மீதான சந்தேகங்களை எழுப்பிய நிலையில், தற்போது, நாகலாந்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. அதேபோல, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கடுமையான மோதல்போக்கினை அங்கே கடைபிடிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு கட்சிகளும், நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.