சென்னை; நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை வடபழனியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது இல்லத்தில், மயில்சாமியின் உடலின்மீது, திருவண்ணாமலை கோவிலில் பூஜிக்கப்பட்ட  வெட்டி வேர் மாலை, நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அணிவிக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதையொட்டி வடபழனி ஏரியாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர் நடிகர் மயில்சாமி. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான இவர் தீவிர சிவபக்தனும் ஆவார். இவர் சிவராத்திரி அன்று சிவனை தரிசித்துவிட்டு வரும் வழியில் மாரடைப்பு காரணமாக சிவலோக பதவி அடைந்தார்.

மயில்சாமி  மிமிக்கிரி  ஆர்ட்டிஸ்டாகவே முதன்முறையில் பொதுவெளியில் அறியப்பட்டார்.  அதைக்கொண்டே 1984ம் ஆண்டு  தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் பல்வேறு படங்களில் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். தீவிர எம்ஜிஆர் ரசிகரான இவர்,  சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

வடசென்னை சாலிகிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இதன் காரணமாக  கடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால், அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இருந்தாலும் தனது பணியை பொதுவெளியிலும் சரி, திரையுலகிலும் சரி திறம்பட செய்து வந்தார்.

இந்த நிலையில், சிவராத்திரியான (பிப்ரவரி 18ந்தேதி) இரவு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ் திரையுலகப் பிரமுகரகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாதை செய்தனர். அதுபோல, சிவன்கோவிலில் வாசிக்கப்படும் வாத்தியங்களைக்கொண்டு, வாத்தியம் இசைக்கப்பட்டது. இந்த இசைக்குழுவினர், அவரது இறுதி ஊர்வலத்தில் இசைத்துக்கொண்டே சென்றனர்.

இதையடுத்து, அவரது உடலுக்கு அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தனர். அப்போது,  அண்ணாமலையாரின் தீவிர பக்தரான மயில்சாமிக்கு,  அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை, நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அண்ணாமலையார் கோயிலின் குருக்களான ரமேஷ் குருக்கள், அண்ணாமலையாரின் தீவிர பக்தர் மயில்சாமி என உருக்கமுடன் கூறினார்.

இதையடுத்து, அவரது உடல் அங்கிருந்து வீட்டிலிருந்து, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாக  மின் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதன் காரணமாக, வடபழனியில்  போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து, வடபழனியில் உள்ள மின் மயானத்தில் மயில்சாமியின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது மகன் இறுதிக்காரியங்களை  மற்றும் குடும்பத்தினர் இறுதி கடன்களை செய்தனர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் அங்குள்ள தகனமேடையில் ஏற்றப்பட்டது  தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் சடலத்துக்கு தீ வைத்தார்.