டில்லி

ஸ்லாமிய அமைப்பான தாருல் உல்லும் தியோபாண்ட் என்னும் அமைப்பு கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் ரம்ஜான் கொண்டாட உத்தரவு இட்டுள்ளது.

 

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  நேற்று ஒரே நாளில் 3.43 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 2.40 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 2.62 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 37 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி நாடெங்கும் மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க அனைத்து வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், மால்கள், 3000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள கடைகள், உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டுள்ளன.   மேலும் முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவையும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிகளுக்கு சென்று ஒன்றாகத் தொழுகை நடத்துவது வழக்கமாகும்.  தற்போது கொரோனா கட்டுப்பாடு அமலில் உள்ளதால் அவர்களால் மசூதிக்குச் சென்று கூட்டுத் தொழுகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்பான தாருல் உல்லும் தியோபாண்ட் அமைப்பு கொரோனா விதிகளுக்கு உட்பட்டு ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என ஃபத்வா (உத்தரவு) பிறப்பித்துள்ளது.  அத்துடன் இந்த நிலையில் கூட்டுத் தொழுகை செய்ய முடியாமல் போனால் அதை இஸ்லாம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் பிரமுகரான மவுலானா அப்துல் காலிக் மதராஸி என்பவர் இந்த பண்டிகையில் முக்கியமானது நஸம் இ காஸ்ட் என்னும் தொழுகை தான் எனவும் அதை அவரவருக்கு சவுகரியமான இடத்தில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் எனவும் யோசனை தெரித்துள்ளார்.  மேலும் அவர் இந்த தொழுகையை 3 அல்லது 5 பேர் மட்டுமே கூடியும் நடத்தலாம் எனவும் கூறி உள்ளார்.