டில்லி

க்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

தற்போது நாடெங்கும் கொரோனா 2 ஆலை பரவலால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.  யாரும் எதிர்பாரா வண்ணம் பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளன.   முகக் கவசம், தனி மனித இடைவெளி இவற்றைத் தாண்டி தடுப்பூசி மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.   தற்போது நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பல மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளன.

நமது அண்டை நாடுகளை விட இங்கு அதிக பாதிப்பு உள்ளதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே காரணம் என பரவலாக  அனைவராலும் குற்றம் கூறப்படுகிறது.   அத்துடன் இந்தியா தன்னிடம் இருந்த 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும் கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.   ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக நிறுவனங்கள் விளக்கம் அளித்தும் அதை யாரும் ஏற்கவில்லை.

விரைவில் கொரோனாவின் 3 அலை தாக்கம் இந்தியாவில் உண்டாகும் எனவும் அது மிகவும் கடுமையானதாகவும் குறிப்பாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  மேலும் இதற்காகக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டியது அவசியம் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களான பாரத் பயோடெக் மற்றும்  சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்கள் மாதத்துக்கு 6 முதல் 7 கோடி டோஸ்கள் தடுப்பூசி உற்பத்தி செய்கின்றன,  இந்த வேகத்தில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடக் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.  அதற்குள் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

எனவே இந்த இரு தடுப்பூசிகள் மட்டுமின்றி மற்ற தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   இன்று மத்திய அரசு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்த எந்த ஒரு தடுப்பூசியையும் இந்தியா இறக்குமதி செய்யலாம் என அறிவித்துள்ளது.   ஆனால் அதே வேளையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகத் தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் ஊட்டி ஆகிய மையங்களில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.    இதற்காக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம் எனவும்  இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் கொரோனா மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்துவது கடினம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.