டில்லி

முகலாயர்கள் நம்மை கொள்ளை அடிக்கவில்லை என ஒரு ஊடக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பல சரித்திர தகவல்களின்படி முகலாயர்கள் நமது நாட்டை கொள்ளை அடிக்க படை எடுத்து வந்ததாகவே உள்ளது.   ஆனால் அதே நேரத்தில் முகலாயர்கள் இந்நாட்டை ஆட்சி செய்த போது இந்தியாவை மிகவும் செல்வ செழிப்புடன் ஆக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.   இது குறித்து செய்தி ஊடகமான ‘டெய்லி ஓ’ ஆங்கில ஊடகம் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரையின் சுருக்கம் பின் வருமாறு :

இந்தியாவுக்கு 1947 ஆம் வருடம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.   அதனால் நாம் நம்மீது படை எடுப்பவர் அனைவரும் நம்மை அடிமைப்படுத்தியதாக தவறாக எண்ணி வருகிறோம்.    பேராசிரியர் ஹர்பன்ஸ் முக்கியா, “ஆக்கிரமிப்பு என்பது ஒரு நாட்டையும் மக்களையும் பொருளாதார நன்மைக்காக வெகு தூரம் உள்ள நாட்டில் இருந்து ஆட்சி செய்வது என்பதே ஆகும்” என தெரிவித்துள்ளார்.

முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெற்ற பிறகு இந்தியராக வாழ்ந்தனரே தவிர வெளிநாட்டினராக வாழவில்லை.  தங்களுடைய அடையாளத்துடன் இந்தியர்களின் அடையாளத்தையும் கலந்து இங்கேயே தங்கி ஆட்சி புரிந்துள்ளனர்.  இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் அவர்களும் இணைந்துள்ளனர்.   அதனால் அவர்களுடைய ஆட்சி குறித்து சமீப காலம் வரை எவ்வித சர்ச்சையும் எழுந்தது இல்லை.    அனைவரும் முகலாயர்களை இந்தியர்களாகவே நினைத்து வந்தனர்.

அக்பர்

அக்பருடைய வாரிசுகள் பலர் ராஜபுத்திர தாய்களுக்கு பிறந்ததால் அவர்களிடையே இந்தியத் தன்மை முழுமையாக இருந்து வந்தது.    அவருடைய முன்னோரான பாபர் இப்ராகிம் கான் லோடியை வென்று டில்லியை கைப்பற்றியதில் இருந்து முகலாயர் ஆட்சி தொடங்கியது.    அவருக்கு பின் வந்த பல முகலாய மன்னர்கள் இந்திய அரச குடும்பங்களில் குறிப்பாக ராஜபுத்திரர்களுடன் திருமண உறவு வைத்துக் கொண்டனர்.   ராஜபுத்திரர்களுக்கு அரசில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டன.

கடந்த 1857 ஆம் வருடம் நடந்த முதல் சுதந்திரப் போரில் இந்திய வீரர்கள் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த போது அப்போதைய முகலாய மன்னரான பக்தூர் ஷா ஜஃபர் என்பவரை இந்திய மன்னர் எனவே கூறி வந்தனர்.  அப்போது பதவி இழந்திருந்த அவருடைய ஆட்சியை மீண்டும் அமைக்கவேண்டும் எனவே இந்த போரை தொடங்கினார்கள்.

இதற்கு முக்கிய காரணம் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டு வரையிலான முகலாயர் ஆட்சி மிகவும் செழிப்பாகவும் அமைதியாகவும் இருந்தது ஆகும்.    இந்திய வர்த்தக முன்னேற்றத்துக்காக முகலாய அரசு சாலை அமைத்தல், நதி நீர் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, சுங்க வரி ரத்து, இந்திய கைவினை பொருட்கள் மேம்பாடு ஆகியவைகளை செய்துள்ளது.  பருத்தி துணிகள், மசாலா பொருட்கள், கம்பளி மற்றும் பட்டு துணிகள், உப்பு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

அது மட்டுமின்றி இந்திய வியாபாரிகள் செல்வச் செழிப்புடன் விளங்கியதால் ஐரோப்பியர் இங்கு வர விரும்பியதாக சர் தாமஸ் ரோ குறிப்பிட்டுள்ளார்.   இஸ்லாமியர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போதிலும் இந்திய வர்த்தகர்களே அதிகம் இருந்துள்ளனர்.    இந்திய வர்த்தகத்தை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியதால் முகலாய சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது எனக் கூறலாம்.

டில்லி அரச பரம்பரையில் வைத்திருந்த பல பொருட்கள் இங்கிலாந்தினரால் கைப்பற்றப்பட்டு தற்போது அந்நாட்டு வசம் உள்ளது.  இதன் மூலம் இந்தியப் பொருட்களை முகலாயர்கள் எடுத்துச் செல்லவில்லை என்பதும் அவர்கள் அவற்றை இங்கேயே வைத்திருந்ததும் தெளிவாகி உள்ளது.   முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இன்றும் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டி தருகிறது.

தாஜ்மகால்

ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் வருடத்துக்கு சராசரியாக பார்வையாளர் மூலம் ரூ.21 கோடி வருமானம் அளிக்கிறது.  குதுப் மினார் ரூ. 10 கோடியும் செங்கோட்டை ரூ.6 கோடியும் வருடத்துக்கு வருமானம் அளிக்கிறது.  இந்த கட்டிடங்கள் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டவை என்றாலும் அவற்றை வடிவமைத்தவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகலாய மன்னர்கள் பெரிய கட்டிடங்களை கட்டியது போல் முகலாயர் ஆட்சியில் அப்போதிருந்த இந்து ஜமீந்தார்களும் வர்த்தகர்களும் காசி உள்ளிட்ட பல நகரங்களில் கோவில்களும் தர்மசாலைகளும் கட்டி உள்ளனர்.  இது முகலாய மன்னர்களின் விருப்பப்படி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  எனவே சரித்திரத்தை மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ பிரிப்பது மிகவும் தவறானதாகும்.

மொத்தத்தில் முகலாயர்கள் இந்தியாவில் இருந்து திருடிச் சென்றனர் என்பது தவறான வாதமாகும்.  இது குறித்து உண்மையை அறிய வரலாற்று நூல்களை படித்தால் மட்டுமே புரியும்.   அதை விடுத்து வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் தகவல்கள் பலவும் அவரவர் கற்பனைக் கதைகள் ஆகும்.   அந்த கற்பனையை உண்மை என நினைப்பது தவறானதாகும்.