லக்னோ: மத்திய அரசு திடீரென்று அறிவித்த 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளதாக தெரியவருகிறது.

north_indian_farmar

அறுவடை நேரத்தில் வெளிவந்த இந்த திடீர் அறிவிப்பினால் அறுத்த பயிர்களை விற்க இயலாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த விதைப்புக்கு விதைகளையோ உரங்களையோ வாங்க முடியாமல் திணறிவருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி அறுவடையையொட்டி வீடுகளின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டவர்கள் அதை எப்படி நடத்தும் வழியறியாமல் தவித்து வருவதாகவும் தெரிகிறது.
உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் விவசாயிகளின் இந்த கஷ்டங்களை தடுக்க அவர்கள் சிறு முகாம்கள் நடத்தி விவசாயிகளுக்கு உதவுமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் உத்திரப் பிரதேசத்தின் பெரும்பான்மையான சிறு கிராமங்களில் வங்கிகள் இல்லை. அங்குள்ள விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளும் இல்லை. அவர்கள் பணத்தையே உபயோகித்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி வியாபாரிகளிடம் நேரடியாக விற்பதுதான். ஆனால் 500, 1000 நோட்டுக்கள் பரிவர்த்தனை முற்றிலும் முடங்கிவிட்டதால் வியாபாரிகளும் விவசாயிகளும் வியாபார பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாத இக்கட்டான நிலையில் இருப்பதாக தெரிகிறது.
அரசின் மூலம் விற்பது என்ற ஒரு வழியிருந்தாலும், அரசு அலுவலகத்தின் ஆமைவேக செயல்பாடுகளும், சிடுமூஞ்சி அதிகாரிகளின் வசவுகளும், பணத்துக்காக மீண்டும் மீண்டும் அலையவிடும் கொடுமைகளும் அரசு மூலம் விற்பது என்பதே விவசாயிகளுக்கு கெட்ட கனவாக்கிவிட்டது. “நீங்கள் போய் தனியார் வியாபாரிகளிடம் விற்றுக்கொள்ளுங்கள்” என்று அதிகாரிகளே இவர்களை துரத்துவதாகவும் தெரிகிறது. அரசின் மூலமும் விற்க இயலாமல், தனியாரிடத்திலும் விற்க முடியாத ஒரு நிலையை உருவாக்கி மத்திய அரசு இப்படி தங்கள் வயிற்றில் அடித்துவிட்டதே என்று விவசாயிகளும் சிறு வியாபாரிகளும் புலம்பி வருகின்றனர்.