சென்னை: தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டம் தோறும் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  அதுபோல உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், இன்று உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து சட்டசபையில்  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் எழிலன் (தி.மு.க.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினார்கள்.

இறுதியில் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார். அப்போது,  உக்ரைன் நாட்டில் போரால் தவித்த 1890 மாணவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை நமது முதல்-அமைச்சரை சாரும். அங்கு படித்து வந்த மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்த விமானங்களில் 1890 மாணவர்களும் எந்தவித பாதிப்பும் இன்றி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தனர்.  சென்னை விமான நிலையத்துக்கே சென்று கடைசியாக வந்த மாணவர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது, அதற்காக உதவ வேண்டும் என  பிரதமரை நேரில் சந்தித்த போதும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள், அவர்களின் படிப்புக்கு, எங்கெல்லாம் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு இருக்கிறதோ அங்கு படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அது நிறைவேற்ற உதவி செய்யப்படும்.  ருமேனியா, ஹங்கேரி, கஜகஸ்தான், செக்குடியரசு, போலந்து போன்ற நாடுகளில் மாணவர்களின் மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்களும் வருகிறது. எனவே உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டம் தோறும் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து,  தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் விவசாய கல்லூரிகள் இல்லாமல் உள்ளது. அதில் மன்னார்குடியும் ஒன்று. வேளாண்மை கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் தேவைப்படும். வருங்காலத்தில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மற்ற மாநிலங்களில் ஒன்றை விட அதிகமான வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு வேளாண்மை கல்லூரி மட்டுமே உள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் அதனை டெல்டா பகுதியான மன்னார்குடியில் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  புதிய வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதனை மன்னார்குடியில் அமைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.